முதல்-மந்திரி குமாரசாமியுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்திப்பு கர்நாடக அரசியலில் பரபரப்பு


முதல்-மந்திரி குமாரசாமியுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்திப்பு கர்நாடக அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி குமாரசாமியை பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்தித்து பேசியது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, 

முதல்-மந்திரி குமாரசாமியை பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்தித்து பேசியது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வியில் முடிந்தது

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா கையில் எடுத்தது. சில எம்.எல்.ஏ.க்களை வளைத்து, அதன் மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்தது. சில முறை நடந்த இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. இதில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. 22 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா வென்றால், கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜனதா அரசு அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறினர்.

அரசியலில் பரபரப்பு

இந்த நிலையில் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. பா.ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த பசவராஜ் தன்டேசுகர் முதல்-மந்திரி குமாரசாமியை நேரில் சந்தித்து பேசி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கொப்பல் மாவட்டம் கனககிரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

குமாரசாமியின் தொடர்பில்...

குமாரசாமியை பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்தித்து பேசியது, பா.ஜனதாவில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது. அவருடன் அக்கட்சியை சேர்ந்த மேலும் சில எம்.எல்.ஏ.க்களும் குமாரசாமியின் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பா.ஜனதா தலைவர்கள் பீதியடைந்து உள்ளனர்.

Next Story