குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்தில் ஆறுமுகம் நினைவு பள்ளியில் நேற்று காலையில், மாவட்ட பா.ஜனதா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இலவச மருத்துவ முகாமை நடத்தின. இந்த முகாமிற்கு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் முகாமிற்கு வந்த குழந்தைகள், பெண்களுக்கு சிகிச்சை அளித்து சுகாதாரமாக வாழ்தல் பற்றியும், பா.ஜனதா அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம், மலிவு விலை மருந்தகங்கள், குறைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட அறிவிப்பில் கோதாவரி- காவிரி நதிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். அவ்வாறு 2 நதிகளும் இணைக்கப்பட்டால் தமிழகத்தில் விவசாயம் வளம் பெறும். அதோடு குடிநீர் பிரச்சினையும் தீரும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பனை, முருங்கை, வாழை பயிர்செய்யப்படுவதை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு பார்வையோடு தான் இருக்கும். மக்கள் நலன் காக்கவே அந்த தொலைநோக்கு திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உடையார் என்பவர் இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவ கோரி, தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டு இருந்தார். இந்த மருத்துவ முகாமின் போது உடையாரை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், அவருக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார். அதனை தொடர்ந்து அவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் கோவில் அருகே உள்ள கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த மருத்துவ முகாமில் டாக்டர் வினு கோபிநாத் தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, உடன்குடி ஒன்றிய பா.ஜனதா தலைவர் திருநாகரன், நகர தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story