மகாத்மா காந்தியை விமர்சித்து கோட்சேவை புகழ்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்


மகாத்மா காந்தியை விமர்சித்து கோட்சேவை புகழ்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Jun 2019 11:30 PM GMT (Updated: 2 Jun 2019 10:32 PM GMT)

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை மும்பை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புகழ்ந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை மும்பை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புகழ்ந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

காந்தி சிலையை அகற்ற வேண்டும்

மும்பை மாநகராட்சி துணை கமிஷனராக இருந்து வரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி. இவர் கடந்த மாதம் 17-ந் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதில், ‘மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டங்கள் விதி விலக்கானவை.

நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் உருவத்தை நீக்கும் நேரமிது. உலகம் முழுவதும் உள்ள அவரது சிலைகள் அகற்றப்பட வேண்டும். நிறுவனங்கள் மற்றும் சாலைகளுக்கு சூட்டப்பட்டு இருக்கும் அவரது பெயர் மாற்றப்பட வேண்டும். காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும். 30.1.1948-க்காக (காந்தியடிகள் கொல்லப்பட்ட தினம்) கோட்சேவுக்கு நன்றி'.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

கண்டனம்

அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி தனது பதிவை நீக்கி விட்டார்.

மகாத்மா காந்தி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “மகாத்மா காந்தியின் கொலையாளி நாதுராம் கோட்சேவை முதலில் பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாக்குரும், அடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. உஷா தாக்குரும் புகழ்ந்தனர். தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி புகழ்ந்துள்ளார். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி கோட்சேவை தெய்வமாக்க பா.ஜனதா முயற்சிப்பது ஏன்? என்றும் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் கூறுகையில், “மகாத்மா காந்தியை அவமானப்படுத்தியும், கோட்சேவை புனிதப்படுத்தியும் கருத்து தெரிவித்த மும்பை மாநகராட்சி பெண் துணை கமிஷனர் நிதி சவுத்ரியை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற கருத்துக்களுக்கு ஊக்கம் அளிக்க கூடாது” என்றார்.

கருத்து திரிக்கப்பட்டது

ஆனால் தான் கிண்டலாக தெரிவித்த கருத்து திரிக்கப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தி குறித்து அவதூறாக எதுவும் கூறவில்லை என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி மறுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், “மகாத்மா காந்தியின் சத்திய சோதனை தான் எனது விருப்பமான புத்தகம். நான் ஒரு போதும் காந்தியை அவமதிக்கவில்லை. மகாத்மா காந்தி தான் தேசத் தந்தை. எனது கருத்து திரித்து கூறப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. 2019-ம் ஆண்டில் நமது தேசத்தை தலைசிறந்த நாடாக மாற்ற நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

Next Story