மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமல்


மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமல்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:00 AM IST (Updated: 3 Jun 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று முதல் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. முதல் நாளான நேற்று 8 ஆயிரம் பேருக்கு 5,100 பேர் மட்டுமே பதிவு செய்தனர்.

வேலூர், 

அரசு பள்ளிகளில் சில ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிகளுக்கு வருவதில்லை, சிலர் பள்ளிக்கு வந்து பின்னர் சிறிது நேரத்தில் வெளியே சென்றுவிடுவதாகவும் புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

இதற்காக கடந்த ஜனவரி மாதமே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பதிவு செய்யப்பட்டனர். அதாவது அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் பணிப்பதிவேடுகளை கொண்டு பதிவு செய்யப்பட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அப்போது பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த முடியவில்லை.

அதனால் கோடை விடுமுறைக்குப்பின் அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோடை விடுமுறைக்குப்பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் வேலூர் மாவட்டத்தில் இந்த பயோமெட்ரிக் முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 334 பள்ளிகளில் 8 ஆயிரத்து 32 ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது ஆசிரியர்களின் வருகை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று மொத்தம் 5 ஆயிரத்து 102 பேர் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை சரியாக கையாளத் தெரியவில்லை என்றும், சில பள்ளிகளில் இன்டர்நெட் இணைப்பு சரியாக இல்லை என்றும் இதனால் ஆசிரியர்கள் தங்கள் வருகையை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய முடிய வில்லை என்றும் தெரிவித்தனர்.

அதேபோன்று கல்வித்துறை அலுவலகங்களிலும் நேற்று முதல் அலுவலக ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.

Next Story