புவனகிரி அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளில் சோகம்
புவனகிரி அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலியானார்கள்.
புவனகிரி,
பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளிலேயே நிகழ்ந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். விவசாயி. இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகன்கள் பரணிதரன்(வயது 9), தரணிதரன்(9).
அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்-நந்தினி தம்பதியரின் மகன் பூவரசன்(9). இவர்கள் 3 பேரும் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். கோடை விடுமுறைக்கு பின் நேற்று காலையில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. 4-ம் வகுப்புக்கு செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் 3 பேரும் புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்றனர்.
மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும், 3 பேரும் தங்களது வீட்டிற்கு புவனகிரி-குறிஞ்சிப்பாடி சாலையில் நடந்து சென்றனர். அப்போது வழியில் இருந்த சாத்தப்பாடி ஏரியில் தண்ணீர் கிடந்ததை கண்டதும், 3 பேருக்கும் அதில் குளிக்க ஆசை ஏற்பட்டது.
உடனே 3 பேரும் அந்த ஏரிக்கு சென்று, தங்களது புத்தகப்பை மற்றும் ஆடைகளை கரையோரத்தில் வைத்தனர். பின்னர் 3 பேரும் ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட 3 பேரும் நீச்சல் தெரியாமல் தத்தளித்து தண்ணீரில் மூழ்கினர்.
இதற்கிடையில் பள்ளிக்கூடத்திற்கு சென்றவர்கள், மாலை 6.45 மணி வரையிலும் வீட்டிற்கு வராததால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்தனர். பள்ளிக்கூடத்துக்கு சென்று பார்த்தனர். ஆனால் பள்ளிக்கூடம் பூட்டி கிடந்தது. இவர்கள் பற்றி சக மாணவர்களிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது பள்ளிக்கூடம் முடிந்ததும் 3 பேரும் வீட்டிற்கு ஒன்றாக நடந்து சென்றதாக அந்த மாணவர்கள் கூறினர்.
உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் தேடிச்சென்றனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் புத்தகப்பை மற்றும் ஆடைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏரியில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் ஏரியில் இறங்கி தேடிப்பார்த்தனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்குப்பிறகு அடுத்தடுத்து 3 மாணவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். ஏரியில் குளித்தபோது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரியவந்தது.
பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளிலேயே ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
Related Tags :
Next Story