தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டதை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநிலத்துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் ருத்ரையன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் பொன்.ரத்தினம் உள்பட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை ஒருங்கிணைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய சுப்பிரமணியனின் பணியிடைநீக்க உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் இளவேனில், அண்ணாகுபேரன், பழனியம்மாள், கவிதா, காவேரி, தெய்வானை உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதே போல் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன் பேசினார். இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரதாப், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் பேசினார்கள். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story