திருப்பூர் ஏ.வி.பி.ரோடு அருகே டாஸ்மாக் கடை திறக்க கூடாது கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


திருப்பூர் ஏ.வி.பி.ரோடு அருகே டாஸ்மாக் கடை திறக்க கூடாது கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 4 Jun 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ஏ.வி.பி. ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது திருப்பூர் அனுப்பர்பாளையம் ஏ.வி.பி. ரோடு மற்றும் நேதாஜிநகர், கவிதா லட்சுமி நகர், முத்துகோபால் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அனுப்பர்பாளையம் ஏ.வி.பி. ரோட்டில் கலைவாணி தியேட்டர் அருகில் வாரச்சந்தை, பஸ் நிறுத்தம், பள்ளி, தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பல உள்ளன. இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. இதில் 23 பேர் மரணம் அடைந்தனர்.

இப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புதிய டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக 8 மாதங்களுக்கு முன்பு முயற்சித்த போது 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே மனு கொடுத்திருந்தோம். அதன்படி அதிகாரிகள் இதன் பின்னர் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உத்தரவாதம் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 30-ந்தேதி மாலை மீண்டும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சி நடந்துள்ளது. இது குறித்து தகவல் தெரிந்ததும் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி மனு கொடுத்த பின்பு பணிகள் நிறுத்தப்பட்டது. எனவே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது. இந்த முயற்சியை கைவிட வேண்டும். பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதுபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் ‘‘ திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான தமிழ்நாடு தியேட்டரிலிருந்து கருப்பகவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனை பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பு, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் தூர்வாரப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.


பொங்கலூர் ஒன்றியம் தொட்டம்பட்டியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் கொடுத்த மனுவில் ‘‘ பொங்கலூரில் கோழி வண்டி டிரைவராக வேலை செய்து வருகிறேன். கோழிவண்டி மேலாளர் ராமகிரு‌‌ஷ்ணன் என்.என்.புதூர் தோட்டத்திற்கு வரக்கூறினார். அதன் பேரில் அங்கு சென்றேன் அப்போது அங்கு ஏற்கனவே இருந்த காளிதாஸ், வெங்கடே‌‌ஷ், ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் மேலும் 3 பேர் சேர்ந்து என்னை தரக்குறைவாக பேசி தாக்கினர். இதில் காயமடைந்த நான் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அவினாசிபாளையம் போலீசார் அங்கு வந்து வாக்குமூலம் பெற்றனர். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றிருந்தார்.

Next Story