கடலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு


கடலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 4:15 AM IST (Updated: 4 Jun 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

கடலூர், 

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதியில் இருந்து விடப்பட்டது. 50 நாட்கள் கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு ஜூன் 3-ந் தேதி (நேற்று) என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகிறது என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியது.

இதனால் பெற்றோர், மாணவ-மாணவிகள் குழப்பத்துக்கு ஆளாகினர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் நேற்று கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டன. ஒரு சில தனியார் மற்றும் மழலையர் பள்ளிகள் மட்டும் சில நாட்கள் கழித்து திறக்க முடிவு செய்து இருக்கின்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டதும் காலையில் இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியும், திருக்குறளும் வாசிக்கப்பட்டன. பின்னர், அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்று வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கல்வி துறை பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்தது.

கடலூர் மாவட்டத்தில் 2½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒரு சில பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அதிலும், 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் வரவில்லை.

கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு இருந்த நிலையில், 2, 6, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டும், 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டும் பாடத்திட்டங்கள் மாற்றுவதாக இருந்தது. ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் மீதமுள்ள வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

அதற்கான பணிகள் முடிவடைந்தாலும், புத்தகங்கள் அச்சிடும் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டதால், 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. விரைவில் அந்த வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்போதும் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் சீருடைகள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளது. ஆகவே சீருடைகள் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த வாரத்தில் சீருடைகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை மாணவ-மாணவிகளுக்கு காலணிகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் ஷூ வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், கருஞ்சிவப்பு நிறத்தில் பள்ளிப்பை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் பச்சை நிறத்தில் வழங்கப்பட உள்ளது. அதுவும் விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக தமிழக அரசு பள்ளிகளில் மழலையர் பள்ளிகள், எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது. அதன்படி, அரசு பள்ளிகளில் அந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் ஏராளமானோர் வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். அவர்களுக்கு சாக்லெட் வழங்கி பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டாலும், மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்பட்டது. சில பள்ளிகளில் சிறு குழந்தைகள் பெற்றோரின் கையை பிடித்துக்கொண்டு நான் ஸ்கூலுக்கு போகல..... என்று அழுதபடி பள்ளி நுழைவுவாயிலில் நின்றதையும் பார்க்க முடிந்தது. பெற்றோர் குழந்தைகளை சமாளித்து, ஆசிரியர்களின் பொறுப்பில் பிள்ளைகளை விட்டுச்சென்றனர். சில பள்ளிகளில் புதிதாக சேர்ந்து இருக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே படிக்கும் மாணவர்கள் இனிப்பு வழங்கியும், ரோஜாப்பூ கொடுத்தும் வரவேற்றனர்.

Next Story