விழுப்புரம், திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 842 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம், திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகங்களில் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 842 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களிலும் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் குறுவட்டம் வாரியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன்படி விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அலுவலர் ரகுபதி, வருவாய் தீர்வாய அலுவலராக செயல்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முதல் நாளான நேற்று கண்டமங்கலம் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுவாக எழுதி பிற்படுத்தப் பட்ட சிறுபான்மை அலுவலர் ரகுபதியிடம் கொடுத்தனர்.
அதாவது பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, திருமண உதவித்தொகை, கல்விக்கடன், பசுமை வீடுகள் உள்ளிட்ட இதர கோரிக்கைகள் தொடர்பாக 240 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 14 பேரின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அலுவலர் ரகுபதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் (பொறுப்பு) பிரபாகாரன், தனி தாசில்தார் ஆனந்தன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி அதிகாரியாக திருக்கோவிலூர் சப்-கலெக்டர் சாருஸ்ரீ பங்கேற்று, அரகண்டநல்லூர் குறுவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 378 கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் கண்டாச்சிபுரம் தாசில்தார் சீனுவாசன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயலட்சுமி, தலைமையிடத்து துணை தாசில்தார் கனிமொழி, வட்ட வழங்கல் அலுவலர் யயாதிராஜா, தலைமை நில அளவை அலுவலர் ஜமாலுதீன், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்திலும் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஜமாபந்தி அதிகாரியாக கலந்துகொண்ட விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளர் மோகன் சித்தலிங்கமடம் குறுவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 224 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 43 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதர மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இளவரசன், மண்டல துணை தாசில்தார்கள் செந்தில்குமார், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story