சேலம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனை


சேலம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனை
x
தினத்தந்தி 3 Jun 2019 10:15 PM GMT (Updated: 3 Jun 2019 7:26 PM GMT)

சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் சிக்கியது.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

சேலம் லஞ்சஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உதவி செயற்பொறியாளர் தென்பாண்டி தமிழ் என்ற பெண் அதிகாரியிடம் இருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்தம் எடுத்து திட்டப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அந்த அதிகாரியிடம் வழங்கிய லஞ்சப்பணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் உதவி செயற்பொறியாளர் அலுவலக ஆவணங்களை கைப்பற்றி ஒப்பந்த தாரர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Next Story