எடியூரப்பாவின் சொந்த ஊரான சிகாரிபுரா புரசபையில் காங்கிரஸ் அமோக வெற்றி
எடியூரப்பாவின் சொந்த ஊரான சிகாரிபுரா புரசபையில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.
சிவமொக்கா,
கர்நாடகத்தில் 61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மே மாதம் 29-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் சிவமொக்கா, பெங்களூரு புறநகர் மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு 31-ந்தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் அபாரம்
இந்த நிலையில் சிவமொக்கா, பெங்களூரு புறநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமொக்காவில் சாகர் நகரசபையில் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அக்கட்சி சொரப் பட்டண பஞ்சாயத்தில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. அதுவும் எடியூரப்பாவின் சொந்த ஊரான சிகாரிபுரா புரசபையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. இதனால் பா.ஜனதாவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சாகரில் பா.ஜனதா வெற்றி
சாகர் நகரசபையில் 31 வார்டுகள் உள்ளன. இதில் பா.ஜனதா 16 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றியை ஈட்டியுள்ளனர்.
சிகாரிபுரா புரசபையில் மொத்தமுள்ள 23 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 12 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா கட்சி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றியை தட்டிச் சென்றுள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் சிகாரிபுராவை பிடித்துள்ளது.
பட்டண பஞ்சாயத்துக்கள்
சிரளகொப்பா பட்டண பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் பா.ஜனதா 2 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றியை பதிவிட்டுள்ளனர்.
சொரப் பட்டண பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் பா.ஜனதா 6 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்)கட்சி மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றிக்கனியை ருசித்துள்ளன.
11 வார்டுகளை கொண்ட ஒசநகர் பட்டண பஞ்சாயத்தில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் தலா 4 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சி 3 வார்டுகளில் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.
அதிர்ச்சி வைத்தியம்
சிரளகொப்பா, சொரப், ஒசநகர் ஆகிய பட்டண பஞ்சாயத்துக்களில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில் சிரளகொப்பா, ஒசநகர் ஆகிய இரு பட்டண பஞ்சாயத்துக்களிலும் காங்கிரசும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து கைப்பற்ற முடிவு செய்துள்ளது. அதுபோல் சொரப் பட்டண பஞ்சாயத்தை சுயேச்சை ஆதரவுடன் கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.
சிவமொக்கா மாவட்டத்தில் மொத்தம் 94 நகர உள்ளாட்சி வார்டுகள் உள்ளது. இதில் காங்கிரசும், பா.ஜனதாவும் தலா 36 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 14 இடங்களிலும் வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வரும் சிவமொக்காவில் உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் கைப்பற்றி, பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது என்றால் மிகையல்ல.
Related Tags :
Next Story