வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 3 Jun 2019 10:30 PM GMT (Updated: 3 Jun 2019 8:10 PM GMT)

வயலோகம் முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த மே மாதம் 26-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை, மாலை என இருவேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். இதையடுத்து மாலை 4 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர் மாலை 6 மணிக்கு தேர்கோவில் நிலையை வந்தடைந்தது. பின்னர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் அன்னவாசல், வயலோகம், குடுமியான்மலை, மாங்குடி, குளவாய்ப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) திருவிழா நிறைவு பெறு கிறது.

பொங்கல் வைத்து வழிபாடு

தேரோட்டத்தை முன்னிட்டு காலை முதலே வயலோகத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்தும் கிடா வெட்டி பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். 

Next Story