பிளஸ்-1-ல் கணித பாடத்தை எடுக்க தந்தை வற்புறுத்தியதால் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
பிளஸ்-1 வகுப்பில் கணித பாடப்பிரிவை தேர்வு செய்யும்படி தந்தை வற்புறுத்தியதால் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் வடக்கு சைதாப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோபி. இவருடைய மகள் காவ்யா (வயது 16) கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் இந்தாண்டு அம்மூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர முடிவு செய்துள்ளார். கோபி தனது மகளை பிளஸ்-1 வகுப்பில் கணித பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை காவ்யா தன்னுடன் எஸ்.எஸ்.எல்.சி. படித்த தோழிகளிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் கணித பாடப்பிரிவு கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அதனால் காவ்யா மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று அரசுப்பள்ளிகள் கோடைவிடுமுறைக்கு பின் திறக்கப்பட்டன. பள்ளிக்கு சென்றால் கடினமான கணித பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டியிருக்குமே என்று நினைத்து காவ்யா விரக்தியுடன் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று காவ்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-1 வகுப்பில் கணித பாடத்தை தேர்வு செய்யும்படி தந்தை வற்புறுத்தியதால் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story