லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 20 பேர் மீட்பு கடலோர காவல்படையினர் நடவடிக்கை


லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 20 பேர் மீட்பு கடலோர காவல்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2019 10:15 PM GMT (Updated: 3 Jun 2019 9:11 PM GMT)

லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 20 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர்.

கருங்கல்,

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷிபு. இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகள் கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தன. இந்த விசைப்படகுகளில் தூத்தூர் பகுதியை சேர்ந்த படகு உரிமையாளரான ஷிபு உள்பட 3 பேரும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஒருவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், ஆந்திராவை சேர்ந்த 6 பேரும் என 20 பேர் கடந்த மாதம் (மே) 2-ந் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த 18-ந்தேதி லட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு படகின் என்ஜின் பழுதானது. இதனால், 2-வது படகில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த படகு மூலம் கரைக்கு கட்டி இழுத்து வந்தனர். அப்போது, 2-வது படகும் பழுதானது. இதனால், மீனவர்கள் ஆழ்கடலில் தவித்தனர். உணவு, குடிநீர் இல்லாமல் கடலில் மிகுந்த சிரமப்பட்டனர்.

பின்னர் அவர்கள் செல்போன் மூலம் குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் மூலம், மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

உடனே இதுபற்றி மும்பையை சேர்ந்த கடலோர காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படைக்கு சொந்தமான விக்ரம் என்ற கப்பல் ஆழ்கடலில் மீனவர்கள் தத்தளித்த பகுதிக்கு விரைந்து சென்று அவர்களை மீட்டது. பின்னர், கடலோர காவல் படையினர், மீனவர்களையும், பழுதான படகுகளையும் லட்சத்தீவு அருகே மித்ரா என்ற தீவுக்கு கொண்டு செல்ல முயன்றனர். அங்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே அங்கு வர மாட்டோம், வேறு தீவுக்கு அழைத்து செல்லுங்கள் என்றனர்.

இதுதொடர்பாக கடலோர காவல்படையின் தலைமையகத்தில் இருந்து தகவல் வந்த பிறகுதான் வேறு தீவுக்கு கொண்டு செல்ல முடியும் என்று அதிகாரிகள் கூறினர். மேலும் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பலிலேயே மீனவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Next Story