தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பல்நோக்கு சிகிச்சை மையம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறக்கப்பட்டது


தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பல்நோக்கு சிகிச்சை மையம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறக்கப்பட்டது
x
தினத்தந்தி 4 Jun 2019 3:30 AM IST (Updated: 4 Jun 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பல்நோக்கு சிகிச்சை மையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று திறக்கப்பட்டது.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று திருநங்கைகளுக்கான பல்நோக்கு மருத்துவ மையம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி திருநங்கைகளுக்கான பல்நோக்கு மருத்துவ மையத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் திருநங்கையர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதி மொழியும் எடுத்தனர். பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கைகளுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் திருநங்கைகளுக்கான பல்நோக்கு மருத்துவ மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.15 லட்சம் செலவில் 2 அறைகள் கொண்ட திருநங்கைகளுக்கான அதிநவீன மருத்துவ மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

17 அறுவை சிகிச்சை

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து துறை மருத்துவர்களும் இங்கு இருப்பார்கள். அவர்களிடம் திருநங்கைகள் ஆலோசனை பெறலாம். மேலும் மற்ற நாட்களில் வழக்கமான சிகிச்சை பெறலாம். திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆண், பெண்ணாக அல்லது பெண், ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையும் அவர்களது விருப்பத்தின் பேரில் செய்யப்படும். கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. திருநங்கைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் அரசு சார்பில் நடத்தக்கூடிய உணவு விடுதிகளின் சமையல் அறையில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, நிலைய அதிகாரி டாக்டர் இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story