நிலத்தை விற்க உறவினர்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி


நிலத்தை விற்க உறவினர்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 4 Jun 2019 5:00 AM IST (Updated: 4 Jun 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை விற்க உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் பையுடன் ஒரு வாலிபர் வந்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும் அவர் தான் வைத்திருந்த பையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். பின்னர் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த வாலிபரை தீக்குளிக்க விடாமல் போலீசார் தடுத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேடசந்தூரை அடுத்த செண்டுவழி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 34) என்று தெரியவந்தது.

மேலும் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து அவர் கூறும்போது, நான் சொந்தமாக வீடு கட்டி வருகிறேன். இதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தேன். இதனால் எனது பூர்வீக நிலத்தை விற்க முயன்றேன் ஆனால் எனது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதனை விற்க அனுமதிக்கவில்லை. மேலும் எனக்கான பங்கையும் கொடுக்கவில்லை. கடன் பிரச்சினையும் தீரவில்லை. இதனால் தான் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

இதற்கிடையே அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு கலெக்டர் அலுவலகம் வந்த அவர், தனது கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தார். அவருடைய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story