பாதை வசதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்; கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
பாதை வசதி கேட்டு தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்திருந்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மக்கள் அளித்த மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், இந்து எழுச்சி அன்னையர் முன்னணி அமைப்பாளர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் அல்லிநகரம் வெங்கலாநகர், பாண்டிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து, தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனுவில், ‘வெங்கலாநகர், பாண்டிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வெங்கலாகோவில் பின்புறம் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி தனியார் அடைத்து விட்டனர். மக்கள் பயன்படுத்தி வந்த பாதை அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டதால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 60 அடி திட்டச்சாலையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களுக்கு பாதை வசதி ஏற்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த குருநாதன் என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எனது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் திருட்டுபோனது. ஆனால், இன்னும் திருடர்கள் பிடிபடவில்லை. எனவே, திருடர்களை கண்டுபிடித்து நகைகளை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.