புதுவை சட்டசபையின் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்பு; எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு


புதுவை சட்டசபையின் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்பு; எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 12:10 AM GMT (Updated: 4 Jun 2019 12:10 AM GMT)

புதுவை சட்டசபையின் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வசதியாக புதுவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான சபாநாயகர் பதவி இடத்துக்கு புதியவரை தேர்ந்தெடுக்க சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக சட்டசபை 3-ந்தேதி கூடும் என்று அறிவித்திருந்தார்.

இந்த தேர்தலில் துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து போட்டியிட 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந் தன. எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால் சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வானார்.

இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி சட்டசபை நேற்று காலை 9.35 மணிக்கு கூடியது. அப்போது மாற்று அவைத்தலைவரான அரசு கொறடா அனந்தராமன் திருக்குறள் படித்து சபை நடவடிக்கையை தொடங்கி வைத்தார். சபாநாயகர் தேர்தலுக்கு சிவக்கொழுந்துவின் பெயரை முன்மொழிந்தவர், வழி மொழிந்தவர் பெயர்களை வாசித்தார்.

மேலும் சபாநாயகர் தேர்தலில் சிவக்கொழுந்து தவிர வேறு யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான், தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் சிவக்கொழுந்துவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், புதிய சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட சிவக்கொழுந்துவை பாராட்டி பேசினார்கள். இறுதியில் ஏற்புரையாற்றிய சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைத்தார்.

நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இதேபோல் சபாநாயகர் பதவியை எதிர்பார்த்திருந்த முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வும் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

Next Story