கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூடத்தில் மேலும் 36 பேரல் ரப்பர் பால் நாசம்


கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூடத்தில் மேலும் 36 பேரல் ரப்பர் பால் நாசம்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:15 AM IST (Updated: 4 Jun 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூடத்தில் இருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மேலும் 36 பேரல் ரப்பர் பால் காலாவதியாகி நாசமானதாக திரும்ப வந்தது.

அழகியபாண்டியபுரம்,


குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, பேச்சிப்பாறை, சிற்றார் போன்ற பகுதியில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இவை கிரிப்பாறை, மணலோடை, சிற்றார், மயிலாறு, கோதையாறு என 5 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

தோட்டங்களில் சேகரிக்கப்படும் ரப்பர் பால் கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் தொழிற்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தி பேரல்களில் அடைத்து கேரள போன்ற பிற மாநிலங்களில் உள்ள விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு பேரலில் 196 கிலோ ரப்பர் பால் இருக்கும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 112 பேரல் ரப்பர் பால் காலாவதியாகி நாசமானதாக திருப்பி வந்தது.


இந்தநிலையில், தற்போது 36 பேரல் ரப்பர் பால் நாசமாகி இருப்பதாக திரும்ப வந்தது. ரப்பர் பாலை சரியான நேரத்தில் விற்பனை செய்யாமல் அதிகாரிகள் காலதாமதம் செய்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தநிலையில், திரும்ப வந்த ரப்பர் பாலை வெளியே கொட்டி அழிப்பதில்லை எனவும், அவற்றை மீண்டும் பதப்படுத்தி பயன்படுத்தப்படும் என தொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story