ரவுடி வெட்டிக்கொலை: போலீஸ் தேடிய 3 பேர் கைது


ரவுடி வெட்டிக்கொலை: போலீஸ் தேடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2019 3:45 AM IST (Updated: 5 Jun 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரமநாதன்(வயது27). இவர் மீது பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரமநாதன் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகளை கடத்தி சென்று திருமணம் செய்வேன் என மிரட்டி வந்தார். இதனால் மோகனுக்கும், பெரமநாதனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவு 8.30 மணி அளவில் வீட்டில் இருந்த பெரமநாதனை மோகன் தூண்டுதலின் பேரில் வினோத் என்பவர் வீட்டில் இருந்து வெளியில் அழைத்து வந்தார். அப்போது மோகன் அவருடைய மகன்கள் ராம்பிரகாஷ், ராஜா, உறவினர்கள் சக்திவேலு, வினோத் ஆகியோர் சேர்ந்து பெரமநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் பெரமநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கைது

இது குறித்து பெரமநாதனின் தாய் தமிழ்ச்செல்வி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் மோகன் மகன் ராம்பிரகாஷ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் மோகன் மகன் ராஜா (25) உறவினர்கள் சக்திவேலு (25) வினோத் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மற்றும் சரண் அடைந்த ராம்பிரகாஷ் உள்பட 4 பேரையும் போலீசார் பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பிரியா உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள மோகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story