ஓசூர் அருகே பரபரப்பு போலீசாரை தாக்கி விட்டு தப்பிய பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு


ஓசூர் அருகே பரபரப்பு போலீசாரை தாக்கி விட்டு தப்பிய பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 4 Jun 2019 11:15 PM GMT (Updated: 4 Jun 2019 7:35 PM GMT)

ஓசூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு எடியூர் பகுதியைச் சேர்ந்தவன் ச‌ஷாங்க் (வயது 23). பிரபல ரவுடி. இவன் மீது பெங்களூரு ராஜாஜி நகர், கோனகுண்டே பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 2 கொலை வழக்குகள், 3 கொள்ளை சம்பவங்கள் உள்பட பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ச‌ஷாங்க் ஓசூர் அருகே அத்திப்பள்ளியை அடுத்த டி.வி.எஸ். சோதனைச்சாவடி பக்கமாக மோட்டார்சைக்கிளில் சுற்றுவதாக அத்திப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அத்திப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலாஜி, ஏட்டு பிரகா‌‌ஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவனை பிடிக்க முயன்றனர்.

அப்போது கொள்ளையன் ச‌ஷாங்க் தான் வைத்திருந்த கத்தியால் ஏட்டு பிரகாசை குத்தினான். மேலும் போலீசாரை அவன் தாக்கினான். இதில் ஏட்டு பிரகா‌‌ஷ் காயம் அடைந்தார். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் பாலாஜி தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி 2 முறை சுட்டு ரவுடி ச‌ஷாங்க்கை சரண் அடையுமாறு கூறினார். ஆனால் அவனோ சரண் அடையாமல் இன்ஸ்பெக்டர் பாலாஜியையும் தாக்க முயன்றான்.

இதனால் இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ச‌ஷாங்கின் காலில் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து ரவுடி ச‌ஷாங்க் கீழே விழுந்தான். இதையடுத்து அவனை போலீசார் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கத்திக்குத்தில் காயம் அடைந்த ஏட்டு பிரகாசும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பெங்களூரு மாவட்ட போலீஸ் அதிகாரி ராம்நிவாஸ் சபட், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகித் ஆகியோர் அத்திப்பள்ளிக்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் ரவுடி ச‌ஷாங்க் சுடப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் கேட்டறிந்தனர். இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ச‌ஷாங்குடன் இருந்து தப்பி ஓடிய ராக்கி, ரேவந்த், சல்மான் ஆகிய மேலும் 3 ரவுடிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் இரவில் போலீசை தாக்கி விட்டு ஓடிய ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story