திருமானூர் அருகே புழுக்கள் கலந்து வந்த குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி


திருமானூர் அருகே புழுக்கள் கலந்து வந்த குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே புழுக்கள் கலந்து வந்த குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2010-ம் ஆண்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே அமைத்து தரப்பட்டது. இக்கிராமத்திற்கு என சொந்தமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக அதை பயன் படுத்தாமல் நேரடியாகவே குடிநீர் குழாய்களுக்கு இணைப்பு கொடுத்தனால் அதன் மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குடிநீருடன் புழுக்கள் அதிகமாக கலந்து வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி நாராயணனிடம் புகார் தெரிவித்தனர்.

பார்வையிட தொடங்கினார்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி நீரை பார்வையிட்ட பின் கொள்ளிடம் கூட்டு குடிநீர் மாவட்ட துணை பொறியாளர் மதியழகன் மற்றும் வட்டார பொறியாளர் சிவசங்கர் ஆகியோரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வர வைத்து இதற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த அதிகாரிகள் நேரடியாக இணைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதால் புழுக்கள் வர வாய்ப்பில்லை என தெரிவித்தனர். பின் குழாய்களில் எங்காவது ஓட்டை ஏற்பட்டு சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளது என எண்ணிய வட்டார வளர்ச்சி அதிகாரி மற்ற அதிகாரிகளை அழைத்து கொண்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் வரும் குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கும் காட்டு பாதைகளை பார்வையிட தொடங்கினார். அவ்வாறு பார்வையிட்டதில் ஒரு சில இடங்களில் குழாய்களில் ஓட்டை ஏற்பட்டு நீர் தேங்கி நிற்பது தெரியவந்தது. அவ்வாறு பல நாட்கள் தேங்கி நின்ற நீரில் புழுக்கள் உருவாகி நீர் இயக்கப்படாத நேரங்களில் அந்த ஓட்டையின் மூலம் புழுக்கள் புகுந்து பொதுமக்கள் குடிக்கும் குடிநீருக்கு வந்திருப்பது தெரியவந்தது.

தட்டுப்பாடு

இதனையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரி மேலும் எங்கெங்கு ஓட்டை ஏற்பட்டுள்ளது என அனைத்தையும் ஆராய்ந்து உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். இந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மஞ்சமேடு கிராமத்தில் இருக்கும் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து 29 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில கிராமங்களுக்கு அவ்வப்போது குடிநீர் வருவதில்லை என ஆய்வுக்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி நாராயணன் உடனிருந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பொறியாளர்களிடம் எதனால் இந்த நீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர்கள் சில கிராமங்களில் சட்ட விரோதமாக திருட்டு இணைப்புகள் கொடுத்து குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தான் இந்த தட்டுப்பாடு ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

இணைப்புகளை நீக்க உத்தரவு

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வட்டார வளர்ச்சி அதிகாரி இந்த பொறியாளர்களிடம் அதுபோன்று திருட்டு இணைப்புகள் பயன்படுத்தி வரும் கிராமங்களை காட்டுங்கள் என கையோடு அழைத்துச் சென்றார். அப்படி பார்வையிட சென்றதில் ஏலாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கர்பாளையம் கிராமத்தில் அவ்வாறு 2 இணைப்புகள் இருந்ததை கண்டறிந்தனர். அதன்பின் வட்டார வளர்ச்சி அதிகாரி அந்த வீட்டின் உரிமையாளர்களை கண்டித்து உடனடியாக அந்த இணைப்புகளை நீக்க உத்தரவிட்டார். மேலும் இது போன்ற பல கிராமங்களில் சட்டவிரோதமாக இணைப்புகள் இருக்கக்கூடும் என எண்ணிய அவர் அவற்றை ஆராய உத்தரவிட்டிருக்கிறார். ஒரே நாளில் உடனடியாக கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த வட்டார வளர்ச்சி அதிகாரி நாராயணனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

Next Story