கோழிக்கறியில் விஷம் கலந்து நாயை கொன்ற தொழிலாளி கைது 8 பூனைகளும் இறந்த பரிதாபம்
திருவொற்றியூரில் அடிக்கடி துரத்தி கடித்ததால் கோழிக்கறியில் விஷம் கலந்து நாயை கொன்றதாக தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 8 பூனைகளும் பரிதாபமாக இறந்தன.
திருவொற்றியூர்
திருவொற்றியூர் மார்க்கெட் முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). இவர் தங்க பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து இரவு நேரத்தில் வரும்போது அந்த தெருவில் உள்ள ஒரு நாய் இவரை துரத்தி கடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் அவர் அந்த நாயை கல்லால் அடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த நாய் அவர் இரவு வேலை முடிந்து செல்லும்போது குரைத்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் நாயை விஷம் கொடுத்து கொல்ல முடிவு செய்தார்.
நாயை கொன்ற தொழிலாளி
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வந்த தொழிலாளி விஜயகுமார், கோழிக்கறியை வாங்கி அதில் விஷம் கலந்தார். பின்னர் அதனை நாய் அருகில் வைத்து விட்டு சென்று விட்டார்.
அதை அந்த குறிப்பிட்ட நாயும், அக்கம்பக்கத்தில் இருந்த 8 பூனைகளும் தின்றன. சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே நாயும், பூனைகளும் பரிதாபமாக இறந்தன. நேற்று காலை நாயும், பூனைகளும் ஆங்காங்கே இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இறந்த பூனைகள், நாயின் உடல்களை சாலையோரத்தில் ஒன்றாக வைத்தனர். பின்னர் அதற்கு மாலைகள் அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
கைது
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூனைகள், நாயை விஷம் வைத்து கொன்றதாக விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story