ரூ.28 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ரூ.28.16 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா திறப்பு எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
ஆவடி,
ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு 22 ஹெக்டேர். இதன் கொள்ளளவு 21.50 மில்லியன் கன அடி. இந்த ஏரியின் கரையின் நீளம் 2,100 மீட்டர். ஏரியின் ஆழம் 12¼ அடியாகும்.
இந்த ஏரியில் தற்போது பாசனம் ஏதும் நடைபெறவில்லை. இந்த ஏரிக்கு விளிஞ்சியம்பாக்கம் வரத்து கால்வாய் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் மதகு மூலம் வெளியேற்றப்பட்டு வந்தது.
தற்போது போதிய மழை இல்லாததால், இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதும் இல்லை தண்ணீர் வெளியேற்றப்படுவதும் இல்லை.
இந்த ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுத்து மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் முதல்கட்டமாக கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.7.16 கோடி செலவில் பணிகளும், இரண்டாம் கட்டமாக 2017-18-ம் ஆண்டில் ரூ.21 கோடி செலவிலும் பணிகளும் நடைபெற்று வந்தது.
பணிகள் முடிவடைந்தது
முதல்கட்ட பணியில் ஏரியின் கரையை பலப்படுத்துதல், புதிய கரை அமைத்தல், மதகுகள் மற்றும் கால்வாய்கள் சீரமைத்தல், புதிய கலங்கள் அமைத்தல், ஏரியை தூர் வாருதல், பறவைகள் சரணாலயம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இரண்டாம் கட்ட பணியில் ஏரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல், கரையின் மேல் நடை பாதை அமைத்தல், வரத்து கால்வாயை சீரமைத்தல், உபரிநீர் போக்கியின் கதவுகள் சீரமைத்தல், சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சிகூடம் அமைத்தல், திறந்தவெளி அரங்கம் அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், பொதுமக்கள் சுற்றிப்பார்க்க பூங்கா மற்றும் அலுவலக கட்டிடம் அமைத்தல், படகு குழாம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மார்ச் 31-ந்தேதி 2019-க்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்நிலையில் பருத்திப்பட்டு ஏரியை சுற்றுலா தலமாக மாற்றி பறவைகள் சரணாலயம் உள்ள இடமாகவும், படகு சவாரி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும் பூங்கா திறக்கப்படாமலேயே தற்போது பொதுமக்கள் நடை பாதையில் காலை மாலையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் படகு சவாரி, உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு பூங்கா உட்பட எதுவுமே செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு பராமரிப்பின்றி இருக்கிறது.
எனவே அரசு பணம் ரூ.28.16 கோடி செலவு செய்து புனரமைக்கப்பட்ட பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Related Tags :
Next Story