சுங்குவார்சத்திரத்தில் இருந்து டெல்லிக்கு கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது


சுங்குவார்சத்திரத்தில் இருந்து டெல்லிக்கு கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2019 10:00 PM GMT (Updated: 4 Jun 2019 9:10 PM GMT)

சுங்குவார்சத்திரத்தில் இருந்து டெல்லிக்கு கஞ்சா கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பவன்குமார் (வயது 42), இவரது சகோதரர் ஓம்வீர் (32). கன்டெய்னர் லாரி டிரைவர்களான இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் வீட்டு உபயோகப்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல கன்டெய்னர் லாரியில் சுங்குவார்சத்திரம் பகுதிக்கு வந்தனர். வரும் வழியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து 82 கிலோ கஞ்சாவை வாங்கிய பவன்குமார் மற்றும் ஓம்வீர் ஆகிய இருவரும் கஞ்சா பொருட்களை பண்டல்களாக கட்டி டிரைவர் இருக்கையின் பின்புறத்தில் மறைத்து எடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சுங்குவார்சத்திரத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு செல்ல முயன்றபோது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் லாரியை சோதனை செய்தனர். அப்போது டிரைவர் இருக்கைக்கு பின்புறம் கஞ்சா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கைது

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி டெல்லிக்கு கடத்த முயன்ற 82 கிலோ கஞ்சாவையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சா கடத்த முயன்ற பவன்குமார் மற்றும் ஓம்வீர் ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இது போன்று பல முறை லாரியில் கஞ்சா கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Next Story