மர்மமான முறையில் இறந்த மார்ட்டின் நிறுவன அதிகாரி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; கோவை கோர்ட்டு உத்தரவு


மர்மமான முறையில் இறந்த மார்ட்டின் நிறுவன அதிகாரி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; கோவை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2019 5:00 AM IST (Updated: 5 Jun 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

மர்மமான முறையில் இறந்த மார்ட்டின் நிறுவன அதிகாரி பழனிசாமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

கோவை,

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது மார்ட்டின் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்த பழனிசாமியிடமும் (வயது43) வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்தநிலையில் கடந்த மாதம் 3-ந்தேதி காரமடை அருகே உள்ள குட்டையில் மர்மமான முறையில் பழனிசாமி இறந்து கிடந்தார். கடந்த 5-ந்தேதி பழனிசாமியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.

பழனிசாமியின் உடலில் காயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரது மரணத் துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை பழனிசாமியின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறி அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை அதிகாரியாக கோவை 8-வது கோர்ட்டு நீதிபதி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். நீதிபதி ராமதாஸ் மேற்பார்வையில் பழனிசாமியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மறுபிரத பரிசோதனை முடிந்து 7 நாட்கள் ஆகியும் பழனிசாமியின் உடலை வாங்க யாரும் வரவில்லை. இதனால் அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி யிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா ரனவீரன், கோவை 8-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், பழனிசாமியின் உடலை இதுவரை வாங்க யாரும் வரவில்லை. எனவே என்ன செய்வது என கேட்டு மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராமதாஸ், பழனிசாமியின் உடலை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் பழனிசாமியின் மனைவி சாந்தாமணி, மகன் ரோகின்குமார் ஆகியோரிடம் உடலை வாங்குமாறு கூற உள்ளனர். அவர்கள் மறுக்கும்பட்சத்தில் பழனிசாமியின் உடலை அவருடைய தாய் அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

Next Story