சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை தூக்கி செல்லும் ஆதிவாசிகள்


சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை தூக்கி செல்லும் ஆதிவாசிகள்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:15 AM IST (Updated: 5 Jun 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை ஆதிவாசி மக்கள் சுமார் 2 கி.மீட்டர் தூரம் தூக்கி செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் ஆதிவாசி மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்க வில்லை. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று பல கோடி செலவில் ஒவ்வொரு ஆதிவாசி கிராமங்களிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அப்பணிகள் ஆதிவாசி மக்களை இன்னும் சென்றடைய வில்லை. பெரும்பாலான கிராமங்களில் ஆதிவாசி மக்களுக்காக தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி வடவயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் வடவயல் ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு 13 குடும்பங்கள் உள்ளது. இதற்காக 8 தொகுப்பு வீடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ள வில்லை. இதனால் அனைத்து வீடுகளும் பழுதடைந்து காணப்படுகிறது. மழைக் காலத்தில் தண்ணீர் வீடுகளுக்குள் வழிந்தோடுகிறது.

மேலும் வீடு இல்லாத ஆதிவாசி மக்கள் பழுதடைந்த வீடுகளில் பல குடும்பங்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் இடநெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் 13 குடும்பத்தினருக்கும் புதியதாக வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்க வில்லை. இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் வீடு கட்டுமான பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதேபோல் ஆதிவாசி காலனியில் இருந்து வடவயல் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதற்கான இடைப்பட்ட பகுதியில் 2 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை வசதியும் கிடையாது. இதனால் ஆதிவாசி மக்கள் வனப்பகுதி வழியாக நடந்து சென்று, தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலை இல்லாததால் எந்த வாகனங்களும் அப்பகுதிக்கு வருவது இல்லை. மேலும் புதிய வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வீடுகள் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதேபோல் நோயாளிகளை அவசர காலத்தில் ஆஸ்பத்திரிக்கு வாகனங்களில் கொண்டு செல்வது இல்லை. அதற்கு பதிலாக ஆதிவாசி மக்கள் நோயாளிகளை தூக்கி செல்லும் அவலநிலை தொடர்கிறது. நேற்று முன்தினம் வயதான ஆதிவாசி பெண் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை சக ஆதிவாசிகள் தோளில் தூக்கியவாறு 2 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று இறுதியாக வாகனத்தில் ஏற்றி கூடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை தோளில் தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எங்கள் கிராமத்துக்கு செல்லும் பாதையில் தனியார் எஸ்டேட் உள்ளது. சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தனியார் எஸ்டேட் நிர்வாகம் சாலை அமைக்க நிலம் ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளது. இதனால் அதிகாரிகள் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story