பழனி பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடி சிறையில் அடைப்பு; சப்–கலெக்டர் நடவடிக்கை


பழனி பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடி சிறையில் அடைப்பு; சப்–கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

பழனி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பழனி,

பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 40). ரவுடியான இவர் பழனி பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கத்தியை காட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும் வேடசந்தூர், தாராபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பழனி பகுதியில் உள்ள ரவுடிகள் மற்றும் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருபவர்களிடம், ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று கடந்த மார்ச் மாதம் சப்–கலெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எழுதி வாங்கினர். இதில் மதன்குமாரும் கையெழுத்திட்டு சென்றார்.

ஆனால் எழுதிக் கொடுத்த 2 நாட்களிலேயே, நெய்க்காரப்பட்டி பகுதியில் மதன்குமார் வழிப்பறியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புத்தாநத்தம் போலீஸ் நிலையத்திலும் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் பழனி பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டி பழனி சப்–கலெக்டருக்கு பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து பழனி சப்–கலெக்டர் அருண்ராஜ், ரவுடி மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கைது செய்து பழனி கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story