தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களது கூட்டணியில் சேருவார்கள் பிரகாஷ் அம்பேத்கர் சொல்கிறார்


தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களது கூட்டணியில் சேருவார்கள் பிரகாஷ் அம்பேத்கர் சொல்கிறார்
x
தினத்தந்தி 5 Jun 2019 3:52 AM IST (Updated: 5 Jun 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலையொட்டி தேசியவாத காங்கிரசை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் எங்களது கூட்டணியில் சேருவார்கள் என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.

மும்பை,

சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பாரிபா பகுஜன் மகாசங் கட்சியை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இவரும், ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியும் மராட்டியத்தில் கூட்டணி வைத்து வஞ்சித் பகுஜன் அகாடி என்ற அணியை உருவாக்கினார்கள்.

3-வது அணியாக உருவான இந்த கூட்டணியால் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறின. இது பல தொகுதிகளில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. மேலும் அவுரங்காபாத் நாடாளுமன்ற தொகுதியில் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணியை சேர்ந்த ஜலீல் வெற்றி பெற்றார்.

10 எம்.எல்.ஏ.க்கள்

இதனால் வரும் செப்டம்பர்-அக்டோபர் வாக்கில் நடைபெற உள்ள மராட்டிய சட்டமன்ற தேர்தலில் வஞ்சித் பகுஜன் அகாடி முக்கிய பங்கு வகிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுமார் 10 எம்.எல்.ஏ.க்கள் வஞ்சித் பகுஜன் அகாடியுடன் தொடர்பில் இருப்பதாக பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக வருகிற 7-ந் தேதி (நாளை மறுநாள்) விரிவாக பேசுவேன் என்றும் அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

காங்கிரசுக்கு மாற்று வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி தான் என்ற நிலைப்பாட்டுக்கு முஸ்லிம்கள் வந்து இருப்பதாகவும், சட்டமன்ற தேர்தலில் தங்களது கூட்டணி 288 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.

Next Story