தாராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


தாராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:13 AM IST (Updated: 5 Jun 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையி்ட்டனர்.

தாராபுரம்,

தாராபுரம் தாலுகா குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடையன்கிணறு மற்றும் மரவாபாளையம் ஆகிய கிராமத்தில், ஆதி திராவிடர் காலனியில் வசிக்கும் மக்கள் யாராவது இறந்து போனால், அவர்களின் உடலை புதைப்பதற்கு இடுகாடு வசதி இல்லாமல் இருந்து வந்தது. இடுகாட்டிற்கு இடம் ஒதுக்கித்தரக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

அதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இடையன்கிணறு மற்றும் மரவாபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆதி திராவிடர் மக்களுக்கு, அந்தந்த பகுதியில் இடுகாட்டிற்காக வருவாய்த்துறை மூலம் இடம் ஒதுக்கித்தரப்பட்டது. இந்த இடமானது மேடு பள்ளங்கள் நிறைந்தும், புதர்கள் அடர்ந்து இருப்பதால், இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாத நிலை இருப்பதாகவும், இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் சார்பில் அதன் நிறுவன தலைவர் பவுத்தன் தலைமையில், கோரிக்கையை வலியுறுத்தி, தாராபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட பவுத்தன் கூறியதாவது:- மரவாபாளையத்தில் இறந்துபோன ஆதி திராவிடர் மக்களை புதைப்பதற்கு இத்தனை ஆண்டுகளாக இடுகாடு வசதி இல்லாமல் இருந்து வந்தது. அதேபோல் இடையன்கிணறு கிராமத்திலும், இறந்துபோகிற ஆதி திராவிடர் மக்களை புதைப்பதற்கு இடம் வசதி இல்லை. அனைவரும் இதுவரை சாலையோரமாக இருந்த நெடுஞ்சாலைதுறைக்குச் சொந்தமான இடத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வந்தார்கள். தற்போது இந்த பகுதியில் 4-வழிச்சாலை திட்டம் நடைபெற்று வருவதால், சாலையோரமாக இருந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டது.

இதனால் இறந்த ஆதி திராவிடர் மக்களின் உடலைகளை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொலைவில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று புதைக்க முயன்றால், அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் இடுகாடு கேட்டு போராட்டங்களை நடத்தினோம். எங்கள் கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறையினர் 2 கிராமங்களுக்கும் தனித்தனியே இடுகாட்டிற்கு நிலம் ஒதுக்கி தந்தார்கள்.

அந்த நிலம் மிகவும் மோசமான நிலையில், புதர்கள் மண்டிக்கிடக்கிறது. அந்த நிலத்தில் உடலை புதைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. சமீபத்தில் இடையன்கிணறு கிராமத்தில் ஆதி திராவிடர் காலனியில் அடுத்தடுத்து இறந்த 3பேரின் உடல்களை, இடுகாட்டில் புதைக்க முடியவில்லை.

அதனால் தாராபுரத்தில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இடையன்கிணறு மற்றும் மரவாபாளையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடுகாட்டை வருவாய்த்துறையின் சுத்தம் செய்து, சுற்றுச்சுவர் அமைத்து. அடைப்படை வசதிகளை செய்து தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் அறிந்த தாசில்தார் ரவிச்சந்திரன் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து. முற்றுகை கைவிடப்பட்டது.

Next Story