தொக்கோட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் நிறைவு: வருகிற 10-ந் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படுகிறது மந்திரி யு.டி.காதர் தகவல்
கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த தொக்கோட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றதையொட்டி வருகிற 10-ந் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறந்து விடப்படுகிறது என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.
மங்களூரு,
பெங்களூருவில் இருந்து வடகேரள மாவட்டங்களான கண்ணுர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் மங்களூரு வழியாக செல்லும் தொக்கோட்டு பிரதான சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு தொக்கோட்டு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிவடையும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆமை வேகத்தில் நடந்த வந்த இந்த பணியால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாலத்தை கட்டி முடிக்க முடியாமல் போனது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
பணிகள் நிறைவு
மேலும் இந்த பாலத்தை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.நளின்குமார் கட்டீல், மாவட்ட நிர்வாகத்திடம் மீண்டும், மீண்டும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சாலை விரிவாக்க பணி உள்பட பல்வேறு இடையூறுகளால் மேம்பால பணிகளை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த மேம்பாலம் கட்டும் பணி தற்போது ஒருவழியாக நிறைவு பெற்று உள்ளது.
மந்திரி ஆய்வு
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொக்கோட்டுவுக்கு சென்ற மாவட்ட பொறுப்பு மந்திரி யு.டி.காதர், தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள மேம்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிந்ததும் மந்திரி யு.டி.காதர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாலத்தின் அருகே சர்வீஸ் சாலையை அகலப்படுத்துவது, விபத்து ஏற்படாமல் தடுப்பது பற்றி ஆலோசித்தார். மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு, மந்திரி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...
இதனை தொடர்ந்து மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த தொக்கோட்டு மேம்பால பணிகள் நிறைவு பெற்று உள்ளன. வருகிற 10-ந் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த பாலம் திறந்து விடப்படுகிறது. இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.
8 ஆண்டுகளாக நடந்து வந்த மேம்பால பணிகள் நிறைவு பெற்று உள்ளதால் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story