டேங்கர் லாரி மீது லாரி மோதல்; அருவி போல டீசல் கொட்டியதால் பரபரப்பு மக்கள் போட்டிப்போட்டு பாத்திரங்களில் பிடித்து சென்றனர்


டேங்கர் லாரி மீது லாரி மோதல்; அருவி போல டீசல் கொட்டியதால் பரபரப்பு மக்கள் போட்டிப்போட்டு பாத்திரங்களில் பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

டேங்கர் லாரி மீது லாரி மோதிய விபத்தில் டேங்கர் லாரியில் இருந்து அருவி போலடீசல்கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் போட்டிப்போட்டு பாத்திரங்களில் டீசலை பிடித்து சென்றனர்.

மங்களூரு,

உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் தாலுகா பங்கரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் டீசல் நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்கள்.

ஆனால், லாரி மோதிய வேகத்தில், டேங்கர் லாரியின் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இதனால், டேங்கரில் இருந்து டீசல் கசிவு ஏற்பட தொடங்கியது. சிறிது நேரத்தில் டேங்கரில் இருந்து டீசல், அருவி போல கொட்டியது.

டீசலை பாத்திரங்களில் பிடித்து சென்றனர்

இதனை அறிந்த அந்தப்பகுதி மக்கள் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள், பாத்திரங்கள் மற்றும் கேன்களில் டீசலை பிடித்து சென்றனர். மக்கள் ஆபத்தை உணராமல், பாத்திரங்கள் மற்றும் கேன்களில் டீசலை பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பட்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து டீசல் கசிவு சரி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பட்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story