ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத் திடீர் ராஜினாமா சித்தராமையா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத், நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதோடு கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தார்.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்தவர் எச்.விஸ்வநாத்.
மாநில தலைவர் பதவி
மைசூரு தொகுதி எம்.பி.யாகவும் பணியாற்றினார். கட்சியில் அவருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பு, அவர் காங்கிரசைவிட்டு விலகி ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். அவர் உன்சூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.
சித்தராமையா விரும்பவில்லை
சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவில் எச்.விஸ்வநாத் இடம் பெறவில்லை. அவரை குழுவில் சேர்க்க சித்தராமையா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
எந்த சாதனையும் செய்யவில்லை
இந்த நிலையில் சமீபத்தில், சித்தராமையாவை எச்.விஸ்வநாத் கடுமையாக குறை கூறி விமர்சனம் செய்தார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது எந்த சாதனையும் செய்யவில்லை என்று கூறினார். இதனால் அவருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் கே.ஆர்.நகரில் ஜனதா தளம் (எஸ்) தோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த எச்.விஸ்வநாத், ஜனதா தளம் (எஸ்) கட்சியில் பண பலத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. தான் பரிந்துரை செய்தவர்களுக்கு டிக்கெட் வழங்கவில்லை. கட்சியின் மாநில தலைவருக்கு கட்சியில் மரியாதை இல்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.
தேவேகவுடாவை தோற்கடித்தனர்
இதனால் அவர் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் பதவியை எச்.விஸ்வநாத் நேற்று ராஜினாமா செய்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
துமகூரு தொகுதியில் திட்டமிட்டு தேவேகவுடாவை தோற்கடித்தனர். ஜோடி எருதுகளை போல் இருக்க வேண்டிய காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகள் அவ்வாறு இருக்கவே இல்லை. மைசூருவில் போட்டியிடுவதாக தேவேகவுடா சொன்னார். ஆனால் காங்கிரசார் சதி செய்ததால், அது முடியாமல் போனது.
அதிகாரத்தை வழங்கவில்லை
காங்கிரஸ் தலைவர்களின் முறையற்ற பேச்சுகளால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஓட்டுகள் சிதறியது. இதனால் ஜனதா தளம் (எஸ்) தோல்வி அடைந்தது. கூட்டணி ஒருங்கிணைப்பு குழு செயல்படாமல் உள்ளது. அது சித்தராமையாவின் கைப்பாவையாக உள்ளது. இரு கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை அவர் செய்யவில்லை.
சித்தராமையாவின் பிடியில் இந்த கூட்டணி அரசு இருக்கிறது. குமாரசாமியை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. ஒருங்கிணைப்பு குழுவில் எனக்கோ அல்லது தினேஷ் குண்டுராவுக்கோ இடம் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தோல்வியை சந்தித்தது. ஜனதா தளம் (எஸ்) கட்சியில் மாநில தலைவவருக்கு உரிய மரியாதை வழங்கவில்லை.
ராஜினாமா செய்துள்ளேன்
இந்த காரணங்களால் ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன். மாநில கட்சிகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருங்கிணைப்பு குழுவில் என்னை சேர்க்க ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் முயற்சி செய்திருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் இந்த முயற்சியை எங்கள் கட்சியின் மேலிட தலைவர்கள் செய்யவில்லை.
நான் தொடர்ந்து கட்சியில் நீடிப்பேன். உன்சூர் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். கட்சியை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன். மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.
தேவேகவுடா வேண்டுகோள்
ஆனால் மந்திரி பதவி வழங்குமாறு யாரிடமும் சென்று கேட்க மாட்டேன். நான் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன். எதற்காக அந்த கட்சிக்கு நான் செல்ல வேண்டும்.
இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா? என்பது தெரியவில்லை. எச்.விஸ்வநாத்துடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story