வானவில் : கேள்வியும்? பதிலும்!
சென்னையில் இருக்கும் வாகன பராமரிப்பு நிறுவனத்தை சேர்ந்த சுதிர் நடராஜன், கார் பராமரிப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்.
காரில் ஏ.சி. பயன்படுத்துவதால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அது ஓடும் தூரத்தில் எவ்வளவு குறையும்?
பொதுவாக காரில் ஏ.சி.யை பயன்படுத்தினால் எரிபொருள் கூடுதல் செலவாகும் என்பது உண்மை. பொதுவாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு கார் 18 கி.மீ. தூரம் ஓடுகிறது என்று வைத்துக் கொண்டால் அதில் ஏ.சி.யை பயன்படுத்தும்போது 3 கி.மீ. குறையும். அதாவது அது 15 கி.மீ. தூரம்தான் செல்லும். அதுவே நெரிசல் மிகுந்த சாலையாக இருந்தால் மேலும் குறையும். எஸ்.யு.வி. போன்ற வாகனமாக இருப்பின் நான்கு முதல் 6 கி.மீ. வரை கூட குறையும்.
கார் டயர்களுக்கு அதிக காற்று நிரப்பினால் கூடுதல் எடை, அதாவது அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்க முடியுமா?
கோடை காலத்தில் கார் டயர்களுக்கு கூடுதல் காற்று நிரப்புவது எப்போதுமே ஆபத்தானது. வெப்பத்தில் காற்று விரிவடையும். இதனால் கார் டயர் வெடிப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதிலும் டயர்கள் பழையனவாக இருப்பின் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம். குளிர் காலங்களில் டயர்கள் சுருங்கும், அந்த சமயத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சற்று கூடுதலாக காற்று நிரப்பலாம். ஆனாலும் கூடுதல் எண்ணிக்கையிலானோர் பயணிப்பதற்கு ஏற்றதல்ல. அது ஒரு போதும் சிறந்ததாக பரிந்துரைக்கப்படுவதில்லை.
காரின் என்ஜின் அதிக சூடாகிவிட்டால் என்ன செய்வது?
பொதுவாக தொடர்ந்து 100 கி.மீ. தூரம் ஓடினாலும் இப்போது வரும் கார்கள் அதிகம் சூடேறாது. அலுவலகத்துக்கு சென்று வருவதனால் பிரச்சினை ஏற்படாது. என்ஜினும் சூடேறாது. நீண்ட தூர பயணத்தின்போதுதான் என்ஜின் சூடாகும் பிரச்சினை ஏற்படும். இதனால் தொடர்ந்து வாகனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு, சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு செல்வது காருக்கும், காரை ஓட்டுபவருக்கும், காரில் பயணிப்பவர்களுக்கும் நல்லது.
கார் என்ஜின் சூடேறிவிட்டதாகக் கருதினால், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, என்ஜின் சூடு ஆறும் வரை காத்திருக்கவும். அதீதமாக சூடானால், அதற்கு ரேடியேட்டரில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியும். இத்தகைய சூழலில் காரை உடனே சர்வீஸ் சென்டருக்கு அனுப்பிவிட்டு, மாற்று காரில் பயணத்தைத் தொடரலாம்.
காரை ஸ்டார்ட் செய்து என்ஜினை நீண்ட நேரம் ஓடச் செய்யலாமா?
கார் என்பது பயணத்திற்கான வாகனம். அதை ஸ்டார்ட் செய்து பயணத்தைத் தொடர வேண்டும். நீண்ட நேரம் என்ஜினை ஸ்டார்ட் செய்து காத்திருப்பதால் எரிபொருள்தான் விரயமாகும். சிறிது நேரம் காத்திருப்பதில் தவறில்லை.
கார் பேட்டரி முனைகளை எவ்விதம் சுத்தம் செய்யலாம்?
முதலில் கார் பேட்டரியின் இரண்டு இணைப்பு களையும் அகற்றிவிட வேண்டும். சமையல் சோடா உப்பு கரைசலை பேட்டரியில் படிந்துள்ள துருவின் மீது போட்டு துருவை நீக்க வேண்டும். இதற்கு வயர் பிரஷ்ஷை பயன்படுத்துவது நல்லது. அல்கலைன் கலவை இருந்தால் அதை உபயோகித்தால் துரு பிடிப்பதை தடுக்கலாம். பேட்டரியில் இரு முனைகளிலும் இணைப்பை ஏற்படுத்திய பிறகு அதன் மீது பெட்ரோலியம் ஜெல்லி (கிரீஸ்) போன்றவற்றை வைப்பதன் மூலம் துரு பிடிப்பதைத் தடுக்கலாம். பேட்டரியை சுத்தம் செய்யும்போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம்.
அதில் அதிக அளவில் அமிலங்கள் இருக்கும். இதனால் கைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே பேட்டரியை சுத்தம் செய்யும்போது முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
Related Tags :
Next Story