சேலத்தில் பயங்கரம்: டெம்போ டிரைவர் அடித்துக்கொலை பொதுமக்கள் சாலைமறியல்–மதுபாட்டில்கள் உடைப்பு


சேலத்தில் பயங்கரம்: டெம்போ டிரைவர் அடித்துக்கொலை பொதுமக்கள் சாலைமறியல்–மதுபாட்டில்கள் உடைப்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 8:06 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் டெம்போ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள கக்கன்காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 27). டெம்போ டிரைவரான இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்தார்.

இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். சதீஷ்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த திலீபன்(30) என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடைய வீட்டுக்கு சதீஷ்குமார் சென்று மதுபாட்டில்கள் கேட்டார். அப்போது அவரிடம் திலீபன் நான் மதுபாட்டில்கள் விற்கவில்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் சதீஷ்குமார் அவரிடம் சென்று மீண்டும் மதுபாட்டில்கள் கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த திலீபன் அவரை திட்டி அனுப்பிவிட்டார். அதைத்தொடர்ந்து சதீஷ்குமார் தனது வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் திலீபன் தனது கூட்டாளிகள் சிலருடன் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம், எனது வீட்டில் இருந்த பணத்தை ஏன் திருடி வந்துவிட்டாய்? என்று கூறி திலீபன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கடுமையாக தாக்கினார். அவருடைய சத்தத்தை கேட்டு அவரது தந்தை ராமசாமி, தாய் இந்திராணி ஆகியோர் அங்கு வந்து தடுத்தனர். அப்போது அவர்களும் தாக்கப்பட்டனர். பின்னர் திலீபன் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த ராமசாமி, இந்திராணி ஆகியோர் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். டெம்போ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய திலீபன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சதீஷ்குமாரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடையாப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் சதீஷ்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், சட்டவிரோதமாக செயல்படும் சந்து மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள் திலீபன் வீட்டுக்குள் நுழைந்தனர். அந்த வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த மதுபாட்டில்களை எடுத்து வந்து சாலையில் வீசி உடைத்தனர். அப்போது திலீபனின் உறவினர்களும் அங்கு திரண்டதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story