படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் கலெக்டர் பிரபாகர் தகவல்


படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 5 Jun 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்காக தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்க அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்க அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலும் கடன் உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது 18 வயதிற்கு மேல் அதிகபட்சமாக 35 வரை பொது பயனாளிகளுக்கு இருக்க வேண்டும். சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். பொதுபிரிவு பயனாளிகள் தமது பங்களிப்பாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவினர்கள் 5 சதவீதம் செலுத்தினால் போதுமானதாகும்.

இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெற http://www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது கல்வித்தகுதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், விலை பட்டியல், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளி, திருநங்கை சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிரு‌‌ஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Next Story