பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு படித்த பள்ளியில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி அவர்கள் படித்த பள்ளியில் 17-ந்தேதி வரை நடக்கிறது.
தர்மபுரி,
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ளஅனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற்று வருகிறது.
இதன்படி பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஏற்கனவே தங்கள் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் எண், குடும்ப அட்டை, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சிக்கான வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ளலாம். 10-ம் வகுப்பு கல்வித்தகுதியினை பதிவு செய்தவர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியாதவர்கள் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில்அணுகி தங்கள் பதிவெண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மையத்தில் தங்கள் பிளஸ்-2 தேர்ச்சியை பதிவு செய்து வருகிறார்கள். கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணியை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி அந்தந்த பள்ளிகளில் வருகிற 17-ந்தேதி வரை வேலைவாய்ப்பு நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் அனைத்து நாட்களிலும் பதிவு செய்யும் மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க தொடங்கிய முதல் நாளே பதிவு மூப்பு தேதியாக கணக்கிடப்பட்டு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும். வேலைவாய்ப்பு துறை இணையதளம் வழியாகவும் மாணவ-மாணவிகள் தங்கள் பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது தலைமை ஆசிரியர் மணி, உதவி தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story