சேலத்தில், ஏ.டி.எம். மையத்தில் ஓய்வுபெற்ற அரசு பெண் அதிகாரியை ஏமாற்றி ரூ.2 லட்சம் அபேஸ்
சேலத்தில், ஏ.டி.எம். மையத்தில் ஓய்வுபெற்ற அரசு பெண் அதிகாரியை ஏமாற்றி ரூ.2 லட்சம் அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்,
மதுரை மாவட்டம் கே.புதூர் ராமலட்சுமி நகரை சேர்ந்தவர் உமாராணி(வயது 63), இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார்.. இவருடைய சகோதரி சேலம் குகை பகுதியில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக கடந்த மாதம் உமாராணி சேலம் வந்தார். சம்பத்தன்று காலை நடைப்பயிற்சிக்காக சேலம் கமிஷனர் அலுவலகம் அருகே அவர் சென்றார்.
அப்போது அவர் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். இவரது ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் நுழைத்த போது அது செயல்படவில்லை. இந்த நேரத்தில் ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த 2 மர்ம ஆசாமிகள் உமாராணியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் நுழைத்து ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டனர். அவர் கூறியதும் ரூ.10 ஆயிரத்தை எடுத்து கொடுத்த ஆசாமிகள், வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை மாற்றி உமாராணியிடம் கொடுத்தனர். அதை அவர் கவனிக்காமல் வாங்கி சென்றார்.
இந்த நிலையில் மதுரைக்கு சென்ற அவர் பணம் தேவைப்பட்டதால் கே.புதூரில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று கார்டை செலுத்தினார். அப்போதும் ஏ.டி.எம். கார்டு செயல்படாமல் வெளியே வந்தது. இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விபரம் கேட்டார்.
அப்போது அவரது கணக்கை ஆய்வு செய்த போது, அதில் இருந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உமாராணி வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை பார்த்த போது அதில் வேறு ஒருவரின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து தான் சேலத்தில் மர்ம ஆசாமிகள் தன்னை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சேலம் வந்த உமாராணி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று இதுதொடர்பாக புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், மர்ம ஆசாமிகள் உமாராணியின் கணக்கில் இருந்து எடுத்த பணத்தை வேறு ஒரு சில கணக்குகளுக்கும், அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பெட்ரோல் அடித்துள்ளதும் தெரியவந்தது. ஏ.டி.எம். மையம் அருகே பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story