கோட்டக்குப்பம் அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி 7 பேர் படுகாயம்
கோட்டக்குப்பம் அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம்,
கோட்டக்குப்பத்தை அடுத்த சின்னமுதலியார் சாவடி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் புதுச்சேரி மீன் மார்க்கெட்டிற்கு சென்று மீன் வாங்கி வருவதற்காக ஒரு ஷேர் ஆட்டோவில் நேற்று அதிகாலை புறப்பட்டனர்.
சின்னமுதலியார்சாவடி கடற்கரை செல்லும் வழியில் சாலையோரம் ஷேர் ஆட்டோவை நிறுத்தி மேலும் 2 பேர் வருவதற்காக காத்திருந்தனர். அந்த சமயத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் இருந்த அண்ணாதுரை மனைவி சித்ரா (வயது 45), காத்தவராயன் மனைவி அஞ்சலாட்சி (35), சுப்பிரமணி மனைவி முத்துலட்சுமி (50), தரணி மனைவி ஏழையா (50), ஆறுமுகம் மனைவி கலா (50), ராதாகிருஷ்ணன் மனைவி ராஜி (36), மற்றொரு ஆறுமுகம் மனைவி குமாரி (42), சுந்தரம் மனைவி கண்ணகி (36), கஜேந்திரன் மனைவி நாவம்மாள் (50) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனே இவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துலட்சுமியும், நாவம்மாளும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 7 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கடலூர் காராமணிகுப்பத்தை சேர்ந்த சக்திவேல் (27) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story