கும்பகோணத்தில் முதியோர் காப்பகத்தில் இருந்த மூதாட்டி திடீர் மரணம் உறவினர்கள் பரபரப்பு புகார்


கும்பகோணத்தில் முதியோர் காப்பகத்தில் இருந்த மூதாட்டி திடீர் மரணம் உறவினர்கள் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:15 PM GMT (Updated: 5 Jun 2019 6:37 PM GMT)

கும்பகோணத்தில், முதியோர் காப்பகத்தில் இருந்த மூதாட்டி திடீரென இறந்தார். அவரது உடலை சரியாக பராமரிக்கவில்லை என்று உறவினர்கள் பரபரப்பு புகார் அளித்தனர். இது தொடர்பாக தாசில்தார் விசாரணை நடத்தினார்.

கும்பகோணம்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் காமராஜர் சாலையை சேர்ந்தவர் தனபாக்கியம்(வயது 94). இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் அனைவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். மகன் ராஜசேகர், பிரான்ஸ் நாட்டில் பணியாற்றி வருகிறார்.

இதனால் ராஜசேகர், தனது தாயை கடந்த 2007-ம் ஆண்டு கும்பகோணம் அருகே திம்மகுடியில் உள்ள முதியோர் காப்பகத்தில் விட்டு விட்டு பிரான்ஸ் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அவ்வப்போது தனபாக்கியத்தின் உறவினர்கள், கும்பகோணத்தில் உள்ள முதியோர் காப்பகத்துக்கு வந்து தனபாக்கியத்தை பார்த்து சென்றனர்.

கடந்த 12 ஆண்டுகளாக முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்த தனபாக்கியம் கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த தகவலை முதியோர் காப்பக நிர்வாகிகள், பிரான்ஸ் நாட்டில் உள்ள ராஜசேகரிடம் தெரிவித்தனர். அதைக்கேட்ட ராஜசேகர் காப்பக நிர்வாகிகளிடம், தான் விரைவில் பிரான்சில் இருந்து வந்து தனது தாயாரின் உடலை பெற்று செல்வதாக கூறினார்.

இதனால் முதியோர் காப்பக நிர்வாகிகள், தனபாக்கியத்தின் உடலை தனியார் உடல் பதப்படுத்தும் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அவர்கள், தனபாக்கியம் உடலை பதப்படுத்தி பராமரித்து வந்தனர்.

நேற்று இரவு ராஜசேகர், பிரான்சில் இருந்து கும்பகோணத்துக்கு வந்து தனது தாயின் உடலை வாங்கி செல்வதாக காப்பக நிர்வாகிகளிடம் கூறினார். இதைத்தொடர்ந்து தனபாக்கியத்தின் உடல் தனியார் நிறுவனத் திடம் இருந்து கும்ப கோணத்தில் உள்ள முதியோர் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் தனபாக்கியத்தின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட முதியோர் காப்பகத்துக்கு சென்று தனபாக்கியத்தின் உடலை சரியாக பராமரிக்கவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் இது குறித்து கும்பகோணம் தாசில்தார் நெடுஞ்செழியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து தாசில்தார் நெடுஞ்செழியன் சம்பந்தப்பட்ட முதியோர் காப்பகத்துக்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் விசாரணைக்கு பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் தனபாக்கியம் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்றனர்.

உயிரிழந்த தனபாக்கியம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரின் தாய் வழி பாட்டி ஆவார்.

Next Story