கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 343 தனியார் பள்ளிகளில் 5,978 இடங்கள் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 343 தனியார் பள்ளிகளில் 5,978 இடங்கள் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2019 3:45 AM IST (Updated: 6 Jun 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 343 தனியார் பள்ளிகளில் 5,978 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (நர்சரி, பிரைமரி, மெட்ரிக்) நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (எல்.கே.ஜி.) 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கடந்த 2013-2014-ம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் 343 சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 5,978 இடங்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். மேலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், துப்புரவு தொழிலாளிகளின் குழந்தை, மாற்றுத்திறனாளி போன்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட 91 விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடைபெறுவதற்கு முன்னர் சிறப்பு பிரிவில் உள்ள மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர் அல்லது முதல்வர்களால் சேர்க்கைக்கான ஆணை வழங்கப்படும். சிறப்பு பிரிவு இடஒதுக்கீட்டில் சேர்க்கை செய்த பிறகு 25 சதவீத இடஒதுக்கீட்டை விட குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் அனைத்து பிரிவை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பள்ளி தாளாளர் அல்லது முதல்வரால் சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

பள்ளி முதல்வர்கள், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்று, சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் சிறப்பு பிரிவு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளாக இருப்பின் அதற்கான உரிய சான்றினை பெற்று சரிபார்த்து அனைத்து சான்றுகளும் சமர்பிக்கப்பட்டதை உறுதி செய்து குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். உரிய சான்றுகள் இல்லாமல் எந்த காரணத்தை கொண்டும் பள்ளியில் சேர்க்கை செய்யப்பட மாட்டாது.

25 சதவீத இடஒதுக்கீட்டை விட அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் கூடுதல் வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுதியான விண்ணப்பங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வட்டார கல்வி அலுவலர் அல்லது வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் அல்லது முதன்மை கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் துறை பிரதிநிதி முன்னிலையில் குலுக்கல் முறையில் 25 சதவீத இடங்களுக்கான தேர்வும், ஒவ்வொரு பிரிவிற்கும் 5 இடங்களுக்கான காத்திருப்பு பட்டியல் தேர்வும் மேற்கொள்ளப்படும்.

எனவே சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்பட அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story