ஒரு மாதமாக திட்டமிட்டு நகையை அபேஸ் செய்த கும்பல் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


ஒரு மாதமாக திட்டமிட்டு நகையை அபேஸ் செய்த கும்பல் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2019 3:30 AM IST (Updated: 6 Jun 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஒரு மாதமாக திட்டமிட்டு கும்பலை சேர்ந்தவர்கள் நகையை அபேஸ் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

நகைப்பட்டறை ஊழியரிடம் 106 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு சென்ற வழக்கில் தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது. அது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் டேனியல் (வயது 30). இவருடைய மனைவி சங்கீதா (23). டேனியல் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் மீன்கடை நடத்தி வந்தார். அதில் சரியான வருமானம் இல்லை. எனவே கடன் அதிகளவில் ஏற்பட்டது. அதை அவரால் அடைக்க முடியவில்லை.

இதற்கிடையே ராமமூர்த்தி வேலை செய்து வரும் நகைப்பட்டறையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த பொன்னையராஜபுரத்தை சேர்ந்த பத்ரிநாதன் என்பவர் அறிமுகம் ஆனார். அவரிடம் நகையை கொள்ளையடிப்பது எப்படி என்று டேனியல் கேட்டார்.

அதற்கு அவர், அங்கு வேலை செய்து வரும் ராமமூர்த்திதான், வெளியூர்களுக்கு நகையை கொண்டு செல்வார். பட்டறையில் இருந்து பஸ்நிலையத்துக்கு மொபட்டில் தனியாகதான் செல்லும் பழக்கத்தை வைத்து உள்ளார். எனவே அவர் செல்லும்போது விபத்தை ஏற்படுத்திவிட்டு நகையை கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இந்த திட்டத்தில் டேனியலின் மனைவி சங்கீதா, தம்பி பிருத்விராஜ், உறவினர் குமார் என்கிற விஜயகுமார், தேனியை சேர்ந்த ராஜா ஆகியோரையும் சேர்த்துக்கொண்டனர். அதன்படி அவர்கள் அனைவரும் கடந்த ஒரு மாதமாக ராமமூர்த்தியை கண்காணித்தனர். ஆனால் அவரிடம் இருந்து நகையை பறிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ராமமூர்த்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பத்ரிநாதன் எப்போது வெளியே செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் நான் 4-ந் தேதி (நேற்று முன்தினம்) தாராபுரம் செல்கிறேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து அவர் மொபட்டில் செல்லும்போது விபத்தை ஏற்படுத்தி நகையை பறிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ராமமூர்த்தி பட்டறையில் இருந்து புறப்பட்டபோது டேனியல், அவருடைய மனைவி சங்கீதா ஆகியோர் ஒரு காரிலும், ராஜா ஒரு மோட்டார் சைக்கிளிலும், பிருத்விராஜ், குமார் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும், பத்ரிநாதன் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

பல இடத்தில் அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்த முயன்றபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் முடியவில்லை. ராமமூர்த்தி ராம் நகரில் உள்ள ராமர் கோவில் அருகே சென்றபோது, அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை.

எனவே அதை பயன்படுத்தி ராஜா தான் சென்ற மோட்டார் சைக்கிள் மூலம் ராமமூர்த்தியின் மொபட் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். உடனே அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து அவரை தூக்கி அருகே உள்ள கடைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை கொடுத்தனர்.

அவரை பின்தொடர்ந்து வந்த டேனியல், சங்கீதா, பிருத்விராஜ், பத்ரிநாதன், குமார் ஆகியோரும் அங்கு வந்து அவருக்கு உதவி செய்வது போன்று நடித்தனர். அவர் கீழே விழும்போது நகை இருந்த பையும் கீழே விழுந்தது. அதை குமார்தான் ராமமூர்த்தியிடம் எடுத்துக்கொடுத்தார்.

அத்துடன் அவருடன் இருந்து அவருக்கு தேவையான உதவியையும் செய்து, அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டார். முதலுதவி சிகிச்சை முடிவதற்கு முன்பே டேனியல், சங்கீதா ஆகியோர் சென்று தங்களின் காரில் ஏறிக்கொண்டனர். பத்ரிநாதனும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பிருத்விராஜூம் அங்கிருந்து சென்று மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து தயாராக நின்றார். அந்த நேரத்தில்தான் குமார், ராமமூர்த்தியிடம் நகை இருக்கும் பையையும், ஹெல்மெட்டையும் மொபட்டில் வைப்பதாக கேட்டு வாங்கி வந்து, ஹெல்மெட்டை மட்டும் வைத்துவிட்டு, நகை இருந்த பையுடன் அங்கிருந்து நைசாக வெளியேறி வந்து, அங்கு தயாராக நின்றிருந்த பிருத்விராஜின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்துச்சென்றார்.

அதில் 86 பவுன் நகை மட்டும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கில் பிருத்விராஜ், குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story