மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி, 

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பண்ருட்டி காமராஜர் நகர் போலீஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் பட்டுசாமி. இவருடைய மனைவி சரசு (வயது 61). கணவர் பட்டுசாமி இறந்து விட்டதால் சரசு மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வருமானத்துக்காக வீட்டு முன்பு இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இட்லி கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை வெகுநேரமாகியும் சரசு வீட்டை சுத்தம் செய்யவில்லை. அவரது நடமாட்டத்தையும் காணவில்லை. ஆனால் வீட்டுக்கதவு மட்டும் திறந்து கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், அருகில் சென்று பார்த்தனர்.

அங்கே வீட்டு முன்பு சரசு தலையில் அடிபட்டு ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது பற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சரசுவை பார்த்த போது, அவர் அணிந்திருந்த செயின், கம்மல் என 3 பவுன் நகையை காணவில்லை. அவருக்கு அருகில் ரத்தக்கறை படிந்த இரும்பு கம்பி ஒன்று கிடந்தது. மர்ம நபர்கள் அந்த இரும்பு கம்பியால் சரசுவை தாக்கி, நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஓடி இந்திராகாந்தி சாலை வரை சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகில் தான் சரசு வீடு உள்ளது. இதை அறிந்தும் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story