கடலூரில், நாளை தொடங்குகிறது ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கடலூரில் நாளை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கடலூர்,
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகாம் நடைபெற உள்ள கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செய்து வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று பார்வையிட்டார். வேலைவாய்ப்பு முகாம் குறித்து நகரின் முக்கிய பகுதிகளில் விளம்பர பலகைகள் மூலம் விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். முகாமை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் சப்-கலெக்டர் சரயூ, கர்ணல் தருண்துவா, மேஜர் பிரஜேஷ், சுபேதார் மேஜர் எஸ்.எம்.பட், உதவி இயக்குனர் (முன்னாள் படைவீரர் நலன்) தெய்வசிகாமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கடலூர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டாக்டர் அரவிந்த் ஜோதி, துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று காலை முகாம் நடைபெற உள்ள மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் முகாமுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது ராணுவ அதிகாரிகள், கடலூர் சப்-கலெக்டர் சரயூ உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story