சிதம்பரம் நகராட்சியில் ரூ.22 கோடி வரி பாக்கி: வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பை துண்டியுங்கள்
சிதம்பரம் நகராட்சியில் ரூ.22 கோடி வரி பாக்கி உள்ளது. எனவே வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம்,
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள், ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் சுரேந்தர்ஷா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். தனியார் பள்ளிகள், நிறுவனங்களும் உள்ளன. இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர், சாலை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அவர்களிடம் இருந்து குடிநீர் வரி, தொழில் வரி, சொத்து வரி, பாதாள சாக்கடை வரி, நகராட்சி கடைகள் குத்தகை வரி, கடைகள் வைப்பதற்கு உரிம கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகிறது. இந்த வரியில் கிடைக்கும் நிதியை வைத்து, நகர மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2018-2019-ம் ஆண்டு நகராட்சி சார்பில் வரி பொது சீராய்வு செய்யப்பட்டது. இதில் குடியிருப்பு பகுதிகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதனால் நகராட்சியில் வரி பாக்கி அதிகரித்துள்ளது. இதில் சொத்து வரி, தொழில் வரி உள்பட 22 கோடியே 17 லட்சம் ரூபாய் வரி பாக்கி உள்ளது. தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வரி செலுத்தாமல் மெத்தனமாக உள்ளதால், நகராட்சிக்கு நிதி பற்றாக்குறை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதனால் நகராட்சிக்கு வரி செலுத்தாத நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வரி செலுத்தாத தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கடைகள், வீடுகள் மீதும் நகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. முதற்கட்டமாக வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.
மேலும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வரி செலுத்தாத நபர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஜப்தி செய்வதற்கான முயற்சியிலும் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட வேண்டும். ஆகவே நகராட்சியின் வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் உடனடியாக தங்களின் வரி பாக்கியை செலுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு ஆணையாளர் சுரேந்தர்ஷா கூறினார்.
கூட்டத்தில் நகராட்சி மேலாளர் காதர்கான், பொறியாளர் மகாதேவன், பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார், இளநிலை உதவியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பால்டேவிட்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story