தஞ்சை புதுஆற்றில் தூய்மைப்பணி: 20 டன் குப்பைகள் அள்ளப்பட்டன


தஞ்சை புதுஆற்றில் தூய்மைப்பணி: 20 டன் குப்பைகள் அள்ளப்பட்டன
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை புதுஆற்றில் தூய்மைப்பணியின் போது 20 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர்,

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்த பாடில்லை. மக்கள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நீர் நிலைகளில் தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர். மேலும் வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் நீர்நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது. தஞ்சை புதுஆற்றில் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டிருந்தன.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தஞ்சை இர்வீன்பாலம் முதல் எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாலம் வரை புதுஆற்றில் நேற்று தூய்மைப்பணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், நகர்நல அலுவலர் நமச்சிவாயம் ஆகியோர் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் பைகள், மாலைகள் தான் அதிக அளவில் கொட்டப்பட்டிருந்தன. இந்த குப்பைகள் எல்லாம் லாரிகளில் ஏற்றப்பட்டு மாநகராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப் பட்டன. மொத்தம் 20 டன் குப்பைகள் அள்ளப்பட்டன. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் கூறும்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்த வேண்டாம். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். நீர்நிலைகளில் குப்பைகளை யாரும் கொட்ட வேண்டாம் என்றார்.

Next Story