குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை ஏராளமானோர் பங்கேற்பு


குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை ஏராளமானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகை ஈகைத் திருநாள் என்றும், நோன்பு பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் சமூகத்தினர் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிறை தெரிந்ததையொட்டி 5-ந் தேதி (நேற்று) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி முகமது சலாகுதீன் அய்யூப் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பாவாகாசிம் பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் நேற்று காலை ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக தொழுகை நடத்தினர். ஏராளமான சிறுவர்- சிறுமிகளும் தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொழுகை முடிவில் வசந்தகுமார் எம்.பி. அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார்.

இதேபோல இடலாக்குடி முகைதீன் பள்ளிவாசல், கோட்டார் பறக்கை ரோட்டில் உள்ள மாலிக்தினார் பைத்துல்மால் பள்ளிவாசல், மணிமேடை கலாசார பள்ளிவாசல், மீனாட்சிபுரம் பள்ளிவாசல், வடசேரி பள்ளிவாசல், தெங்கம்புதூர், கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம், இனயம், தக்கலை, திருவிதாங்கோடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. இந்த தொழுகைகளில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் பங்கேற்றனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்களின் வீடுகளில் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை விருந்துகளும் தடபுடலாக நடந்தன. ஏழை- எளியவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், விருந்தளித்தும் உபசரித்தனர்.

Next Story