மாயமான கிராம நிர்வாக அதிகாரி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார் கொலையா? போலீசார் விசாரணை
மீஞ்சூர் அருகே மாயமான கிராம நிர்வாக அதிகாரி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 24). பொன்னேரி அடுத்த வல்லூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர்.
தண்டவாளத்தில் பிணம்
இந்த நிலையில் மீஞ்சூர் ரெயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மாயமான கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனை உறவினர்கள் தேடி வந்தநிலையில் சந்தேகத்தின்பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள ஆண் பிணத்தை நேரில் பார்த்தனர். அப்போது அது மாயமான மணிகண்டனின் உடல் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
கொலையா?
மணிகண்டனை யாரும் அடித்துக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயில் மோதி இறந்தாரா? என்ற கோணத்தில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story