கடந்த ஆண்டு நடந்த விபத்தில் ரெயில் மோதி இறந்த 600 பேரின் அடையாளம் தெரியவில்லை ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேட்டி
தாம்பரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில், ரெயில்வே டி.ஜி.பி., சைலேந்திரபாபு, நேற்று ஆய்வு செய்தார்.
தாம்பரம்,
ரெயில்வே டி.ஜி.பி., சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும், 46 ரெயில் நிலையங்களில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு, முதியோர் இல்லங்கள் மற்றும் அரசு மறுவாழ்வு மையங்களில், தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில், 100-க்கும் மேற்பட்டோர், அரசு இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும், கடந்த ஆண்டு, 2,500-க்கும் மேற்பட்டோர், தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, ரெயிலில் அடிபட்டு இறந்தனர். அதில், 600 பேரின் அடையாளம், இதுவரை தெரியவில்லை.
இதை தடுக்கவே, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். பெற்றோர்களை பாதுகாக்காத பிள்ளைகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து, ஆராயப்படும்.
பெரும்பாலும், ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவே முயன்று வருகிறோம். அவை முடியாத பட்சத்தில் அரசு இல்லங்களில் தங்க வைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story