முதுகுளத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை


முதுகுளத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதுகுளத்தூர் வழியாக காவிரி கூட்டுக்குடிநீர் பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்கிறது. ஆனால் முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் ஒரு குடம் குடிநீரை அப்பகுதி மக்கள் ரூ.15 விலை கொடுத்து வாங்குகின்றனர். இதேபோல மற்ற தேவைகளுக்கு ஒரு குடம் தண்ணீர் ரூ.6 வீதம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏற்றவில்லையாம். ஆனால் மாதந்தோறும் தண்ணீர் வினியோகம் செய்தாக கூறி பேரூராட்சி நிர்வாகத்திடம் பணம் வசூலித்து வருகின்றனராம்.

இந்நிலையில் முதுகுளத்தூரை சேர்ந்த 13 மற்றும் 14–வது வார்டு பொதுமக்கள் 200–க்கும் மேற்பட்டோர் இணைந்து கமுதி சாலையில் மெயின் லைனில் இருந்து குடிநீர் இணைப்பு கொடுத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இணைப்புகளை அடைத்ததால் 200 குடும்பத்தினரும் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை தொடர்ந்து அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து இணைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சி அதிகாரி இல்லாததால் தங்களது கோரிக்கை மனுவை ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

முதுகுளத்தூர் பகுதியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் முறையாக பராமரிப்பு மற்றும் வினியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் குடிநீரை தோட்டங்களுக்கு பாய்ச்சவும், தொழில் நிறுவனங்களுக்கும் இணைப்பு கொடுத்துள்ளதாக பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக முதுகுளத்தூரில் உள்ள 13 மற்றும் 14–வது வார்டு பகுதிக்கு குழாய்கள் அமைத்து காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பேரூராட்சி அலுவலகம் முன்பாக குடிநீர் வாரிய அலுவலர்களை கண்டித்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று சங்கராண்டி ஊருணி பகுதி தலைவர் முனியசாமி தெரிவித்துள்ளார்.


Next Story